demigod

August 8, 2006

Uravugal Odintha Paravaigal – உறவுகள் ஒடிந்த பறவைகள் !!!

Filed under: Stories, Tamil — demigod @ 10:44 am

– தேன்கூடு & தமிழோவியம் இணைந்து நடத்தும் மாதாந்திரப் போட்டி ஆகஸ்ட் 2006-க்காக –

கொரடாச்சேரி. பேருந்து நிலையமும் ரயிலடியும் இணைந்து பரப்பளவில் சிறுத்துப் போன ஒரு குக்கிராமம். ஆயிரம் முறை சொல்லிட்டேன் அம்மாகிட்ட, “வேண்டாம்மா, நான் போகல” அவ்வளவு முக்கியம்னா நீயே போயிட்டு வாயேன்னு. அதுலயும் மாசம் மாசம் என்ன போகச் சொல்ற. அப்படி என்னதான் அந்த கோயில்ல பிரசித்தமோ! இல்ல அப்படி என்னதான் அந்த கோயில்ல உனக்கு பிரார்த்தனையோ!

ஆனாலும் கேட்கலையே அம்மா. மாசம் முதல் தேதி ஆனா, எல்லார் வீட்லயும் கரண்ட் பில் கட்டுவாங்க, இல்ல தண்ணி பில் கட்டுவாங்க. எங்க அம்மா என்னடான்னா, இந்த கோயிலுக்கு அதுவும் இந்த குக்கிராம கோயிலுக்கு போயிட்டு வரச் சொல்றாங்க.

ஆயிரம் வேலைக்கு நடுவே இந்த ஊருக்கு போறதுன்றதே ரொம்ப சிரமம்னா, அதுலயும் அங்க போன பிறகு மொபைல் போன் கூட வேலை செய்றது இல்ல. கோயிலும் குளமும் இருந்தா போதுமா? மொபைல் போன் வேலை செய்ய ஒரு டவர் போடக்கூடாது? ஆனா இதெல்லாம் சொன்னாலும் அம்மா சமாதானம் ஆகிறது கிடையாது. சரி, என்ன பன்றது? அம்மா ஆசைக்காக மாசம் ஒரு நாள் வேட்டைக்கு போற மாதிரி அம்மா வேண்டுதலுக்காக இந்த ஊர் கோயிலுக்கு வர வேண்டி இருக்கு.

இந்த தடவையும் வழக்கம் போல கோயில் சாத்தி இருந்தது. சாமி கும்பிடுறதுக்கு கூட இந்த ஊர்ல கூட்டம் சேர்றது இல்ல. எங்க பார்த்தாலும் ஆடு மாடு கூட்டம் மட்டும்தான். வேற வழி இல்லாம, தட்டு தடுமாறி அக்ரஹாரம் வந்து குருக்கள் வீட்டு கதவைத் தட்ட, கும்பிடப் போன தெய்வம்… போல குருக்களே கதவை திறந்தார்.

“சாமி, கொஞ்சம் கோயிலைத் திறக்கிறீங்களா?” என்றேன். “அடடா முதல் தேதின்றத மறந்துட்டேன், இதோ பொறுங்கள், சித்த நாழியில் வந்துட்டேன்” என்றார்.
“சரி, நீங்க கோயிலுக்கு வாங்க, நான் அங்க வெயிட் பன்றேன்” எனச் சொல்லிவிட்டு நடக்கத் தொடங்கினேன்.

வழியெல்லாம் ஆடு, மாடுகளைத் தவிர ஆள் அரவமே இல்லை. கோயிலை நோக்கி நடக்கையில், மாட்டுக் கழுத்து மணி ஓசை நடுவில், ஏதோ ஒரு சினிமா பாடலின் முனுமுனுப்பு, யாருன்னு பார்த்தா, மாடு மேய்க்கும் அந்த சிறுமி. ஒவ்வொரு தடவையும் நான் கவனிச்சிருக்கேன் மொபைல் வழியா சினிமா பாடல்கள் ரிங்டோனா இந்த கிராமத்துக்கு வந்து சேரலன்னாலும், இந்த சிறுமி மூலமா வந்து சேர்ந்துட்டுதான் இருந்தது.

இப்படி ஏதேதோ சிந்தனைகள் ஓடினாலும், அம்மா மேல இருந்த அந்த சின்ன கோபம் மட்டும் போகவே இல்லை. அதற்குள் கோயில் வர, குருக்களும் வர, வழ்க்கம் போல பூஜை, நமஸ்காரம், தட்சணை என அந்த மாத முதல் தேதி, அம்மாவின் பிரார்த்தனை என் வழியே முடிவுக்கு வந்தது.

ரோடு இருப்பதற்கான அறிகுறியே இல்லாத அந்த வரப்பின் மீது நடந்து போய்தான், நிறுத்தி வெச்சுட்டு வந்த பைக்-கிட்ட போக முடியும். நான் நடந்து கொண்டிருக்கும் போதே தூரத்தில் வந்து கொண்டிருந்த டிரெயினோட சத்தம் கேட்டது.

ஏதோ சத்தம் கேட்டு திரும்பிப் பார்க்க, அந்த மாடு மேய்த்துக் கொண்டிருந்த சிறுமி, என்னைத் தள்ளி விட்டு, என்னைத் தாண்டி டிரெயின் கடந்து போகும் கேட்டை நோக்கி வேகமாக ஓடினாள்.

எனக்கு கொஞ்ச நேரம் ஒன்னுமே புரியல! சினிமா பாட்டு கேட்கிற சிறுமிக்கு இன்னமும் டிரெயின் மேல ஆசையா? இது தினமும் போற டிரெயின் தானே, பின்ன ஏன் இந்த ஓட்டம்?

யோசித்துக் கொண்டே நடந்து வந்த நான் கேட்டை அடைந்தேன். டிரெயின் போற வரைக்கும், வெயிட் பண்ணிதான் போக முடியும். நான், அந்த சிறுமி அப்புறம் அந்த கேட்மேன் எங்களைத் தவிர யாருமே இல்ல. இருந்தாலும் அந்த கேட்மேன் கேட்டை சாத்திட்டு டிரெயின் கடந்து போறதுக்காக வெயிட் பண்ணிட்டு இருந்தார்.

மூச்சிறைத்து கொண்டு இருந்த அந்த சிறுமியைப் பார்த்து, “ந்தே ஆண்டாளு, என்னமோ உன்னப் பெத்த ஆத்தாளும், அப்பனும் வந்து இறங்கற மாதிரி இப்படி தினமும் ஓடி வர்றியே, அப்படி உன்னை யார்தான் தேடி வரப் போறாங்களோ?” என இளக்காரமாக பேசி ஏதோ லைட்டு தூக்கி காமிக்கவும், டிரெயின் கடக்கவும் சரியா இருந்தது.

டிரெயின் போன அந்த அஞ்சாறு நிமிஷமும் நான் ஆண்டாளு முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். கறுத்துப் போன முகத்தோட, வேகமா கையாட்டிக் கொண்டிருந்தாள்.

எனக்கு ஒன்னும் புரியல, கேட்மேன் – கிட்ட கேட்டேன், இது தினமும் நடக்குமான்னு?. அவரும் சொன்னார், “ஆமாம் தம்பி, இந்த ஊர்ல டிரெயின் நிற்கிறது கூட கிடையாது, ஆனா தினமும் ஆண்டாள் மட்டும் எங்க இருந்தாலும் மூச்சிறைக்க இங்க ஓடி வந்துடுவா. அனாதையான அவளுக்கு ஒரு வேளை அவ அப்பன், ஆத்தா வருவாங்கன்னு ஒரு நம்பிக்கையோ என்னவோ?”

கேட்மேன் சொல்லி முடிக்கவும், எனக்கு சுறுக்கென்று இருந்தது. திரும்பி நடந்து கொண்டிருந்த ஆண்டாளு பின்னடியே ஓடினேன். அவளை நிறுத்தி அவளிடமே கேட்டேன். “ஏம்மா, இப்படி தினமும் ஓடி வர?”.

என்னை ஒரு முறை தீர்க்கமாக பார்த்தாள். “என்னை தேடி என் அம்மா, அப்பா வரப் போறதில்லைன்னு எனக்கு நல்லாத் தெரியும். இருந்தாலும் நான் ஓடி வரதுக்கு காரணம், அந்த டிரெயின் போற அந்த சில நிமிஷத்துல யாராவது என்னைப் பார்த்து கையாட்டுவாங்க இல்லை, அதான்”. “ஏன்ணே நீயும்தான் மாசா மாசம் எங்கூருக்கு வர, என்னிக்காவது நீ என்னைப் பார்த்து கையாட்டி இருக்கியா? அதனாலதான் நான் தினமும் இப்படி ஓடி வர்றேன். சரி சரி ஆடெல்லாம் அப்படியே விட்டுட்டு வந்துட்டேன்னு” தலை தெறிக்க திரும்பி ஓடினாள்.

எனக்கு மனசெல்லாம் வலித்தது. கூடவே ஏதேதோ புரிந்தது. அன்பு, பாசம் எல்லாம் பகிர்ந்து கொள்ளும் போது மட்டுமே பெருக்கெடுக்கிறது. மறுக்கப்படும் போது மட்டுமே. அதன் மகிமை ஊர்ஜிதப்படுத்தப் படுகிறது. ஊர் பேர் தெரியாத சில பேர் கையாட்டும் போது உணரப்படும் அந்த அன்பு, எங்கம்மா எனக்காக என்னை கோயிலுக்கு வரச் சொல்லி வற்புறுத்தும் போது புரியவில்லையே என வருத்தப்பட்டேன்.

பைக் நோக்கி நடந்த எனக்கு தண்டவாளங்களின் வெறுமை என்னமோ செய்தது. எது எப்படி இருந்தாலும், இனி ஒவ்வொரு மாசமும் தவறாமல், மனக் கசப்பில்லாமல் இந்த ஊருக்கு வர முடிவு செய்தேன். அம்மாவின் ஆசைக்காகவும், ஆண்டவனின் பிரார்த்தனைக்காகவும் மட்டுமல்ல. ஆண்டாளுக்காகவும்.

Advertisements

6 Comments »

 1. நல்ல கதை

  //அம்மா ஆசைக்காக மாசம் ஒரு நாள் வேட்டைக்கு போற மாதிரி அம்மா வேண்டுதலுக்காக இந்த ஊர் கோயிலுக்கு வர வேண்டி இருக்கு//

  மான்-லாம் மாட்னப்பறமும் வேட்டை…ம்ம்ம்!

  Comment by ராசுக்குட்டி — August 9, 2006 @ 6:43 pm

 2. என்னங்க நம்ம ஊரை (கொரடாச்சேரி) யை இப்படி குக்கிராமமா சொல்லிட்டீங்க?! அது ஒரு பேரூராட்சி இல்லியா?

  வேற ஊர் பேர் வச்சிருக்கலாமே! (சுத்து வட்டாரத்தில எத்தினியோ இருக்கே, பெருமாளகரம், வெண்ணவாசல்,மாங்குடி இது போல..)

  Comment by சதீஷ் — August 10, 2006 @ 10:07 am

 3. நன்றி, ராசுக்குட்டி.

  நான் வேட்டைன்னு சொன்னது அந்த ஊர் காடு போல இருந்ததுன்னு பொருள்படவே, நமக்கு எதுக்கு மான் எல்லாம். 🙂

  Comment by demigod — August 10, 2006 @ 11:22 am

 4. சதீஷ், நீங்க வேற, இது கதைங்க!!! ஊர் பேர இப்ப கூட மாத்திடலாம்னுதான் யோசிச்சேன், ஆனா தேன்கூடு விதிமுறைப்படி அனுப்பினப் பிறகு மாத்தக்கூடாதாம் 🙂

  Comment by demigod — August 10, 2006 @ 11:38 am

 5. Touching story in simple format 🙂

  Comment by Dev — August 10, 2006 @ 2:48 pm

 6. Thanks Dev, Keep visiting 🙂

  Comment by demigod — August 10, 2006 @ 4:09 pm


RSS feed for comments on this post. TrackBack URI

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Blog at WordPress.com.

%d bloggers like this: