demigod

September 4, 2006

Konjam Lift Kidaikuma?

Filed under: Stories, Tamil — Tags: , , — demigod @ 10:51 am


தேன்கூடு & தமிழோவியம் இணைந்து நடத்தும் மாதாந்திரப் போட்டி செப்டம்பர் 2006-க்காக –

ஆள் அரவம் இல்லாத, அடர்ந்த மரங்களை இரு புறமும் கொண்ட நேர் கோட்டுச் சாலை. இரவின் வீரியமான குளிர்பனி திரையைக் கிழித்துக் கொண்டு, சீரான வேகத்துடன் ஓடிக் கொண்டிருந்தது அந்த அம்பாசிடர் கார். செல்வம் கண்களை ஒரு முறை கசக்கி கொண்டு, காரிலிருந்த கடிகாரத்தைப் பார்த்தான்.

நடு நிசியைத் தாண்டி 1:40AM எனக் காட்டியது. ஐந்து மணி நேரமாக கார் ஓட்டிக் கொண்டிருந்ததின் சோர்வு அவன் கண்களில் தெளிவாகத் தெரிந்தது. இரவு நேரத்தில் கார் ஓட்டுவது என்பது ஒன்றும் அவனுக்கு புதிதில்லை. இருந்தும் அன்று ஏனோ ஒரு வெற்றுணர்வு அவன் கூடவே தொற்றிக் கொண்டு வந்தது.

மீண்டும் ஒரு முறை கடிகாரத்தைப் பார்த்தான். திரும்பி பின் சீட்டை ஒரு நோட்டம் விட்டு, ரியர்வியு கண்ணாடியை ஒரு முறை பார்த்துட்டு, முன்னால் கோடாக தெரிந்த சாலையைப் பார்த்தபடியே காரை செலுத்திக் கொண்டிருந்தான்.

சிறிது நேரம் சென்றிருக்கும். அந்த இரவு நேரத்திலும் ரோட்டின் இடது ஓரமாக யாரோ ஒருவன் கை மறித்து நின்றிருந்தான்.
நிறுத்துவதா? வேண்டாமா? என்று யோசித்துக்கொண்டு இருக்கும் போதே, கார் அவனையும் தாண்டிச் சென்றிருந்தது. இந்த நேரத்தில், பேச்சுத் துணைக்கு யாராவது இருந்தால் நன்றாகத்தான் இருக்கும் எனத் தோன்றவே, வண்டியின் வேகம் குறைத்து நிறுத்தினான். பின் சீட்டை ஒரு முறை திரும்பிப் பார்த்தான். பின்பு வேகமாக பின்னோக்கி வந்து அவன் முன் நிறுத்தினான்.

“கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா?” – அவன்.

“எங்க போவனும், நீங்க?” – செல்வம்.

“இன்னும் ஒரு 12KM தள்ளி பக்கத்துல இருக்குற ஒரு கிராமத்துக்குள்ள போகனும். இங்க இருந்து ஒரு 10KM தள்ளி ஒரு பாலம் இருக்கு, அங்க இறக்கி விட்டீங்கன்னா, நான் நடந்து உள்ளே போயிடுவேன்.” என்றான்.

“சரி, வாங்க ஏறிக்கிங்க” – என்றான் செல்வம்.

வந்தவன் கதவைத் திறந்து, அவனுக்கு இடது பக்கமுள்ள முன் சீட்டில் உக்கார்ந்து கொள்ள, செல்வம் மீண்டும் வண்டியை ஸ்டார்ட் செய்து வேகம் பிடித்தான்.

லிப்டு கேட்டு ஏறி வந்தவன், பார்ப்பதற்கு ஒரு 35 வயது நிரம்பியவன் போல தோன்றினான். அவன் அணிந்திருந்த உடையும், ஒடிந்த தேகமும், மெல்லிய தாடியும் படித்தவன் போலக் காட்டியது. கையில் ஒரு மஞ்ச பை வைத்திருந்தான்.

“என்னங்க இந்த நேரத்துல, தனியா எப்படி இந்த ரோட்ல?” – செல்வம்.

“என்னங்க பன்றது. நான் பார்க்கற வேலை அப்படி. இப்பத்தான் பட்டறை வேலை முடிஞ்சது. பட்டறைல இருந்து மெயின் ரோட்டுக்கு வரதுகுள்ள, கடைசி பஸ்ஸையும் மிஸ் பண்ணிட்டேன். அதான்..” என்றவன் ஒரு முறை மஞ்ச பையை தொட்டு சரி பார்த்துக்கொண்டான்.

“இப்படி ராத்திரி நேரத்துல தனியா நின்னுகிட்டு இருந்த்தீங்களே – உங்களுக்கு பயமா இல்லையா? – செல்வம்.

“இல்லீங்க, என் வேலை முடிய எப்பவுமே ராத்திரி ஆயிடும், அதனால இதெல்லாம் பழகிடிச்சு.”

“என்னங்க இப்படி சாதாரணமா சொல்லீட்டீங்க? என்னால எல்லாம் இப்படி தனியா இந்நேரத்துல.. நினைச்சுக் கூட பார்க்க முடியலை. ஏதோ வீடு மாதிரி கார் கதவ மூடிக்கிட்டு, போயிட்டே இருக்கலாம், ஆனா ரோட்ல தனியா… ரொம்ப கஷ்டம்” – செல்வம்.

“எனக்கு இந்த பேய் பிசாசு மேல எல்லாம் நம்பிக்கை இல்லீங்க” என்றான் கூட வந்தவன்.

“எனக்கு கூடத்தான் நம்பிக்கை இல்லை, ஆனா சில நேரத்துல நம்மளையும் அறியாம பயம் வந்துடுறது ரொம்ப சாதாரணம் இல்லையா? அதுதானே மனித இயல்பும் கூட..”

“நீங்க என்ன வேனும்னாலும் சொல்லுங்க, அது அவங்கவங்கள பொறுத்த விஷயம்.” என்று சொன்னவன் மீண்டும் ஒரு தடவை மஞ்ச பையை வருடினான்.

“கரெக்ட். நீங்க வேணும்னா இது வரைக்கும் பயப்படாம இருந்து இருக்கலாம், ஆனா என்னிக்காவது ஒரு நாள் பயப்படுவீங்க”. – செல்வம்.

“பார்க்கலாம்” என்றான் உணர்ச்சியற்று.

“சொன்னா நம்ப மாட்டீங்க, என் வைப் முன்னால நான் பயமில்லாத மாதிரிதான் காட்டிக்குவேன். அதுவே அவ ஊருக்கு போயி நான் தனியா இருந்தா – ராத்திரி நேரத்துல பாத்ரூம் போக கூட பயப்புடுவேன்.” செல்வம் பேசிக் கொண்டே அவனை திரும்பி பார்த்தான்.

“எல்லாத்துக்கும் மனசுதான் காரணம், என்னிக்காவது நீங்க பாத்ரூம்ல பேயோ பிசாசோ பார்த்து இருக்கீங்களா? இல்லையே அப்புறம் ஏன் பயப்படனும்?”

“அது சரி, கடவுளைக் கூடத்தான் நாம நேர்ல பார்த்தது இல்ல, அதுக்காக கடவுள் நம்பிக்கை இல்லைன்னு சொல்ல முடியுமா?” “பேய் பிசாசு எல்லாம்  இருக்கோ இல்லையோ? ஆனா எல்லாருக்கும் பயம்னு ஒன்னு இருக்கிறது உண்மை. என்ன, எந்த ஒரு கட்டத்துல எல்லை மீறி பயத்தை வெளிக்காட்டுறாங்கறதுல மட்டும்தான் மனுசங்க வேறுபடுறாங்க.” சொல்லிவிட்டு அவனை மீண்டும் பார்த்தான்.

செல்வம் சொன்னதுல அவனுக்கு உடன்பாடு இல்லாதது போல முகத்தை வைத்துக் கொண்டிருந்தான்.

செல்வம் திரும்பி காரின் பின் சீட்டைப் பார்த்தான். மீண்டும் பக்கத்துல இருந்தவனைப் பார்த்தான்.

“நீங்க பயப்படாம இருந்தா ஓரு விசயம் சொல்றேன்” – செல்வம்.

“நான் மட்டும் தனியா வரலை, கார் பின் சீட்ல ஒரு டெட்பாடி இருக்கு” சொல்லி முடிக்கவும் அவன் திரும்பிப் பார்த்தான். செல்வம் தொடர்ந்தான். ஆமாம் பின்னாடி ஒரு பிணம் இருக்கு. அதை எடுத்துக் கொண்டு போயி அவங்க வீட்ல சேர்க்கத்தான் போயிட்டு இருக்கேன்”.

“தனியா பிணத்தோட போக கொஞ்சம் பயம்தான், நல்ல வேலை பேச்சுத் துணைக்கு நீங்களாவது வந்தீங்க”. சொல்லி முடிக்கவும், கூட வந்தவன் தொண்டையை இருமி சரி செய்து கொண்டான்.

“பாலம் பக்கத்துலதான் இருக்கு, வண்டியை நிறுத்துங்க..” என்றான்.

“என்ன பயந்துட்டீங்களா?” என்றான் செல்வம்.

“இல்லை நான் இங்கேயே இறங்கிக்கிறேன், வண்டியை நிறுத்து என்றான்”. செல்வம் வண்டியை நிறுத்தவும், பக்கத்துல இருந்தவன் மஞ்சப் பையில இருந்து ஒரு கத்தியை எடுத்தான்.

செல்வத்தின் கழுத்துக் கிட்ட கத்தியை வைத்தான். “நாந்தான் என் வேலை அப்படி, இதுக்கெல்லாம் பயப்படுறதில்லைன்னு சொன்னேன் இல்ல. என் வேலையே இதான். எடு. பைல இருக்குற பணம், போட்டு இருக்குற வாட்சு, வேற எதாவது நகை எல்லாம் கழட்டு” என்றான்.

செல்வம் கொஞ்சம் மிரண்டுதான் போனான். என்ன செய்வது எனத் தெரியாமல் திகைத்துக் கொண்டே சொன்னான்.

“என் கிட்ட கொஞ்சம் பணம் மட்டும்தான் இருக்கு, பின்னாடி இருக்கிற பிணம் மேலதான் நகை வாட்சு எல்லாம் அப்படியே இருக்கு, வேனும்னா அதையும் எடுத்துக்கோ, என்னை விட்டுடு” என்றான்.

“வண்டி சாவியைக் கொடு” என வாங்கியவன் செல்வத்தோட பணத்தையும் வாங்கி கொண்டு வண்டியிலிருந்து இறங்கினான். காரின் பின் சீட்டு கதவைத் திறந்து ஒரு முறைப் பார்த்தான். படுக்க வைக்கப்பட்டிருந்த பிணத்தின் கையிலிருந்த வாட்சை கழட்டினான்.

அந்த ஒரு நிமிடம் நிலவிய அமைதியை குலைத்து எழுந்தது அந்த குரல்.

“யார்ரா அவன் என் வாட்சை கழட்டுறது!!!!!”

பிணம் எழுந்து உட்கார, அந்த வழிப்பறித் திருடன் கையிலிருந்த எல்லாத்தையும் போட்டுவிட்டு தலை தெறிக்க ஓடினான்.

ஓடியவன் ஓடி மறையவும், செல்வம் சத்தம் போட்டு சிரித்தான். கீழே இறங்கி வந்து சாவி, பணம் மற்றும் கத்தி எல்லாத்தையும் வேகமா எடுத்துக் கொண்டு காருக்குத் திரும்பினான். காரின் கதவைச் சாத்தவும், பின்னால இருந்த சரவணன் “என்னடா? யார்டா அவன்?” என்றான்.

செல்வமும் சரவணனும் ஒன்றாக வந்ததும், சரவணன் அயர்ந்து தூங்கியதை பிணம் என்று சொன்னதும், எதற்கும் பயப்பட மாட்டேன் என்று சொன்ன திருடன் பயந்து தலை தெறிக்க ஓடியதையும் சொல்ல சொல்ல இருவரும் மாறி மாறி சிரித்தனர்.

“சும்மா சொல்லக் கூடாது, பிணம் மாதிரியே தூங்குற நீ” – என்றான் செல்வம்.

“அடப் பாவி, என்னை பிணமாவே ஆக்கிட்டியா? நம்மளை எல்லாரும் சாவுகிராக்கின்னு திட்றது சரியாத்தான் இருக்கு போ” என்றவன் சிரித்துக் கொண்டே “சரி சரி நீ வந்து தூங்கு, நான் காரை ஓட்டுறேன்” என்றான். இருவரும் இடம் மாற வண்டி கிளம்பி வேகம் பிடித்தது.

சிறிது நேரம் சென்றதும் செல்வம் நன்றாகத் தூங்கிப் போனான். இன்னும் சிறிது நேரம் போனது. மறுபடியும் சாலையின் இடது ஓரம்.. இன்னொருவன்..

“கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா?”

காரை நிறுத்திய சரவணன், பின்னாடி திரும்பி பார்த்தான், பின் சிரித்துக் கொண்டே சொன்னான் – “ஏறிக்குங்க”. 🙂

Advertisements

9 Comments »

 1. Good one!
  Good pace to narrate this witty tale.

  The title could have been different though.

  Best of Luck.

  Comment by Harish — September 4, 2006 @ 2:39 pm

 2. கலக்கலான கிரைம் கதை. க்ளைமேக்ஸ் எதிர்பாராத நகைச்சுவை. ஆங்கிலப் படங்கள் முடிவது போல், முடிவில் ஒரு ட்விஸ்ட்..
  ஆக மொத்தத்தில் சிறுகதை, கிரைம் சிறப்பு !

  வாழ்த்துக்கள் !!

  ***

  விமர்சனங்களை
  இங்கே பாருங்கள்

  Comment by சோம்பேறி பையன் — September 4, 2006 @ 3:34 pm

 3. என்ன ஒரு கற்பனை வளம். கதை அருமை.

  Comment by ஜெஸிலா — September 5, 2006 @ 5:11 pm

 4. Thanks Harish.

  That was the title decided/given by the competition organizers and the story was made just for that title.

  Comment by demigod — September 5, 2006 @ 5:19 pm

 5. சோம்பேறி பையன்! ஜெஸிலா, உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி. பார்க்கலாம் இந்த முறை எத்தனை ஓட்டுக்கள் என்று 🙂

  Comment by demigod — September 5, 2006 @ 5:21 pm

 6. மிக நன்றாக இருக்கிறது. வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  Comment by natarajan — September 5, 2006 @ 7:42 pm

 7. அடுத்த செட் தேன்கூடு விமர்சனங்களுக்கு இங்கே பாருங்கள் !!

  Comment by சோம்பேறி பையன் — September 7, 2006 @ 9:25 am

 8. நல்ல நடை, நல்ல திருப்பம்; ஆங்கிலப் பெயர் வைத்ததால படிக்கமாட்டோம் என்பதெல்லாம் இல்லை demigod, நல்ல படைப்புகள் தர வாழ்த்துக்கள்!

  Comment by J Chandrasekaran — September 19, 2006 @ 9:01 pm

 9. படிச்சுப் பார்த்தேன். நல்லா இருந்திச்சு உங்க கதை. கொஞ்சம் பயமாவும்… ஒரு வரியில சொல்லணும்னா … இங்கே பாருங்க.

  Comment by முரட்டுக்காளை — September 23, 2006 @ 2:57 am


RSS feed for comments on this post. TrackBack URI

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: